பண்ருட்டியில் இடி-மின்னல், சூறைகாற்றுடன் மழை
- பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் கோடை மழை பெய்தது.
- பண்ருட்டி ஒன்றியம் நடுக்குப்பம் பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான பலாமரங்கள் ஒடிந்து விழுந்தன.
பண்ருட்டி:
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் கோடை மழை பெய்தது. பண்ருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், அண்ணா கிராமம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டியது. அனல் காற்று வீசியது. வெயில் தாங்க முடியாமல் வீட்டிலேயே மக்கள் முடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 8 மணி அளவில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர்வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி ஒன்றியம் நடுக்குப்பம் பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான பலாமரங்கள் ஒடிந்து விழுந்தன.
இதேபோல தென்னை, வாழை, முந்திரி மரங்களும் காற்றில் சாய்ந்தன. காற்றுடன் மழைபெய்ததால் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்தது. இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு கிராமம் முழுவதும் இருளில் முழ்கியது. மின் ஊழியர்கள் இரவு முழுவதும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.