உள்ளூர் செய்திகள்

சிறுமுகையில் கைத்தறி நெசவாளர்கள் பேரணி

Published On 2023-07-14 14:34 IST   |   Update On 2023-07-14 14:34:00 IST
  • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  • சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, ஆலாங்கொம்பு, பகத்தூர், கிச்சகத்தியூர், திம்மராயம்பாளையம், சென்னம்பாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம், வச்சினம்பாளையம், மூக்கனூர், மூலத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நெசவு செய்யப்படும் பட்டு மென்பட்டு, காட்டன், கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

எனினும் மூலப்பொருள்களின் நிலையில்லாத விலை, விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் நெசவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போதைய சூழ்நிலையில் கைத்தறி நெசவுத்தொழில் மிகவும் நலிவடைந்து நெசவாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்யக்கூடாது, மூலப்பொருட்களின் விலையினை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். நெசவாளர்களுக்கான தனி வங்கி, நெசவாளர்களுக்கான நிரந்தர உறுப்பினர் அடையாள அட்டை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ராமர் கோவில் அருகே சிறுமுகை அனைத்து கைத்தறிப்பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இன்று காலை கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

பேரணியில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்யக்கூடாது. மூலப்பொருள்களின் விலையினை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இப்பேரணியானது ராமர் கோயிலில் துவங்கி நால்ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தியேட்டர் மேடு பகுதியில் நிறைவடைந்தது. பின்னர் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் சிறுமுகை அனைத்து கைத்தறிப்பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் தண்டபாணி உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உட்பட கைத்தறி நெசவாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News