கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.5 கோடி தங்கம் மோசடி
- அஜய்த்துல்லா என்பவரிடமிருந்து 260 கிராம் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர்.
- தங்க நகை பட்டறை உரிமையாளர் சேக் சலாம் அலி ஜமேதாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விகேஷ் ஜெயின்(வயது41). தங்க நகை வியாபாரி.
இவர் கோவை வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தேன். பின்னர் சொக்கம்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்து கோவையில் உள்ள நகை பட்டறையில் தங்கத்தை கொடுத்து அதனை ஆபரணமாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார்(39) என்பவர் இடையர் வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.
அவருடன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஜய் துல்லா(20) என்பவர் நகை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அவர்களிடம் கடந்த 3ஆண்டுகளாக தங்கத்தை கொடுத்து அதனை ஆபரணங்களாக மாற்றி மும்பைக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தேன்.
கடந்த ஏப்ரல் 1ந் தேதி நான் மும்பையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து 11 கிலோ 473 கிராம் தங்கத்தை பெற்று அதனை சேக் சலாம் அலி ஜமேதார் மற்றும் அஜயத்துல்லா ஆகியோரிடம் ஆபரணங்களாக மாற்றி தரும்படி கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் 541 கிராம் தங்கத்துக்கு மட்டும் ஆபரணங்களை செய்து கொடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ரூ.5 கோடி மதிப்பிலான 10 கிலோ 340 கிராம் தங்கத்துடன் தலைமறைவாகிவிட்டனர்.
எனவே அவர்களை கண்டுபிடித்து தங்கத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி தங்க நகை தொழிலாளி அஜய்த்துல்லா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 260 கிராம் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர். தங்க நகை பட்டறை உரிமையாளர் சேக் சலாம் அலி ஜமேதாரை போலீசார் தேடி வருகின்றனர்.