உள்ளூர் செய்திகள்

கடன் தொல்லை பிரச்சினையால் கணவரை திருடனாக்கிய மனைவி- சிக்கிய தம்பதி சிறையில் அடைப்பு

Published On 2023-09-14 08:52 GMT   |   Update On 2023-09-14 08:52 GMT
  • சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
  • கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை:

மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி ஞானசுதன் சீலி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி ஞானசுதன் சீலி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆலோசனைப்படி அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமார் (வயது 34) மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் திட்டமிட்டு 20 நாட்களாக கடையை நோட்டமிட்டு இந்த நகை பறிப்பு சம்பவத் தில் ஈடுபட்டுள்ளனர் என் பது தெரிய வந்துள்ளது.

மேலும் மனைவி கவிதா அதிகமான கடன் தொல்லை இருப்பதால் எப்படியாவது கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 9 பவுன் நகையை மீட்டு வேறு ஏதாவது நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா, அவர்களுக்கு உடந்தையாக வேறு நபர்கள் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News