உள்ளூர் செய்திகள்

த.வெ.க. தலைவர் 'அப்டேட்' இல்லாமல் இருக்கிறார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published On 2025-12-20 09:56 IST   |   Update On 2025-12-20 09:56:00 IST
  • தமிழ்நாடு முதலமைச்சரின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார்.
  • பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் தான் இடைநிற்றல் 16 சதவீதமாக இருந்தது.

திருச்சி:

திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட மாடல அரசு உருவாக்கப்பட்டு குறிப்பாக ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்று இருப்பார் என்ற நிலைமையை உருவாக்கி தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார்.

தமிழக முதல்வர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாக நாம் கூறவில்லை, அதற்கான தரவுகளை நமது கொள்கை எதிரியாக இருக்கும் மத்திய அரசு கூறி வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் ஒன்று பெண்களின் மனநிலை, மற்றொன்று ஆதி திராவிட நலக்குழு மனநிலை. இதை தொன்று தொட்டு நாம் பார்த்து வருகிறோம்.

இன்றைய பெண்களின் மனநிலை, மகளிர் உதவித்தொகை, விடியல் பயணம் மூலம் அனைத்து தாய்மார்களின் மனதிலும் தமிழக முதல்வர் நின்று விட்டார். தமிழக முதல்வர் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை தகர்த்தெறியும் வண்ணம் காலனி என்ற சொல்லே இருக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டார். அப்படிப்பட்ட முதல்வர் ஆட்சியை மீண்டும் நாம் அமைத்திட அயராது பாடுபடுவோம்.

எஸ்.ஐ.ஆருக்கு பணியாற்றியது போலவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உள்ள நிலையில் தீவிரமாக பணியாற்றி நீக்கப்பட்டது யார், எதற்காக நீக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், தமிழ கத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டு பேசினார். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அதாவது, 2017-18 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் தான் இடைநிற்றல் 16 சதவீதமாக இருந்தது.

தற்போது அந்த சதவீதம் 7.7 ஆக குறைந்துள்ளது. இந்த தகவல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வந்த செய்தி. அப்போதே அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. பழைய தகவல்களை வைத்துக்கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் தி.மு.க. அரசை குறை கூறி வருகிறார். எனவே விஜய் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News