6.50 லட்சம் பேர் நீக்கம்: கோவை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம் ஏன்?- பரபரப்பு தகவல்கள்
- கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.
கோவை:
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை கோவை மாவட்டத்திலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்று முடிந்தது.
பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பவன்குமார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு, இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 பேர், இரட்டைப்பதிவுகள் 23 ஆயிரத்து 202 பேர், இதர காரணங்கள் 380 பேர் என கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.
அதாவது 20.17 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் குடிபெயர்ந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இப்படி மாறியவர்கள் மட்டுமே 20 சதவீத வாக்காளர்கள் இருப்பர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் போது பலரும் இறந்து விட்டனர். இவையே வாக்காளர் பட்டியலில் அதிகம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணம் ஆகும்.
கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நீக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்களில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தான்.
இதற்கிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விவரங்கள், நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களுடன் அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் படிவம் 7, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8, ஆதார் எண் இணைக்க படிவம் 6 பியை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவரிடம் ஜனவரி 18-ந் தேதி வரை அளிக்கலாம். ஆன்லைன் வாயிலாக www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் Voter Helpliner என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.