நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- கவுரி ஒரு கண் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்று வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுரி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துபாண்டியன் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி, 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
இதில் மூத்த மகள் கவுரி(வயது 21) நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக செவிலியராக பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடிந்த பின்னர் புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வேலை பிடிக்காத காரணத்தால் கவுரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதன்பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாயார் வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன வேதனையில் இருந்த கவுரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.