உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2023-05-03 14:36 IST   |   Update On 2023-05-03 14:36:00 IST
  • பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது.
  • போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 615 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 599 போலீஸ்காரர்கள் பணியிடங்களுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் விவரங்கள் மற்றும் தேர்வு குறித்து tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. மேலும் இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இலவச பயிற்சி

எனவே இந்த போட்டித் தேர்வுக்கு தயாராக உள்ள தேர்வர்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Thoothukudi Employment Office Telegram channel-ல் பகிரப்பட்டுள்ள Google Forms -ஐ பூர்த்தி செய்தும் இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்யலாம். போலீஸ் துறை பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News