உள்ளூர் செய்திகள்

திருட்டுப்போன 23 பவுன் நகை, பணத்தை மீட்டு தர வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயி மனு

Published On 2022-09-05 09:57 GMT   |   Update On 2022-09-05 09:57 GMT
  • முனைஞ்சிப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் நகை அடகு வைத்து ரூ.90 ஆயிரம் கடன் வாங்கினேன். மேலும் என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.1,10,000-ஐ வீட்டு பீரோவில் வைத்து இருந்தேன்.
  • தினமும் செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம்.

முனைஞ்சிப்பட்டி:

நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மேலமுனைஞ்சிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), விவசாயி. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் விவசாயம் மற்றும் ஆடுகள் வளர்த்து பராமரித்து வருகிறேன். கடந்த பிப்ரவரி 4-ந்தேதி முனைஞ்சிப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் நகை அடகு வைத்து ரூ.90 ஆயிரம் கடன் வாங்கினேன். மேலும் என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.1,10,000-ஐ வீட்டு பீரோவில் வைத்து இருந்தேன்.

மறுநாள் எனது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 23 பவுன் நகை திருட்டு போனது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது நானும், எனது மனைவியும் ஆடு மேய்க்க சென்ற நேரத்தில், எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டு பக்கம் வந்ததாக கூறினார்கள்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த நான் மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் சந்தேக நபரிடம் போலீசார் இதுவரை விசாரிக்க வில்லை.

எனது வீட்டில் இருந்து திருட்டுபோன நகை, பணம் 6 மாதங்களாகியும் இதுவரை மீட்கப்படவில்லை. எனவே அவற்றை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தினமும் செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம். அதனை நன்கு அறிந்தவர்கள் ஆட்கள் இல்லா நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.

இதனால் அந்த தெருவில் வசிக்கும் அவரது உறவினர்கள் உள்பட சுமார் 30 பேரின் கைரேகைகளை ஆய்வு செய்து வருகிறோம். சி.சி.டி.வி. மூலமும் அந்த நாளில் அந்த பகுதியில் நடமாடியவர்கள் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றனர்.

Tags:    

Similar News