உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் பால் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள்.

களக்காடு பகுதியில் பண்ணை பால் தட்டுப்பாடு- பொதுமக்கள் பாதிப்பு

Published On 2023-01-27 09:01 GMT   |   Update On 2023-01-27 09:01 GMT
  • 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் அவற்றை விற்பனை செய்து விடுகின்றனர்.

களக்காடு:

களக்காட்டில் ஸ்ரீகிருஷ்ணா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (பால் பண்ணை) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 538 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி

கோவில்பத்து, படலை யார்குளம், கருவேலங்குளம், புதூர், ஊச்சிகுளம், கடம்போடுவாழ்வு, பத்மநேரி உள்ளிட்ட 32 இடங்களில் கறவை கூடங்கள் அமைத்து பால் உற்பத்தி செய்து, 18 பணியாளர்கள் மூலம் களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்து வருகின்றனர். தினசரி 6 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

பருவநிலை மாற்றம்

இந்நிலையில் சமீபகாலமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மாடுகளுக்கு பெரியம்மை, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதுபோல மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் உரிமையாளர்கள் விற்பனை செய்து விடுகின்றனர்.

இதன் காரணமாக பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது பால் உற்பத்தி 6 ஆயிரம் லிட்டரில் இருந்து 5 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பால் உற்பத்தியில் களக்காடு கிருஷ்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.

கடந்த ஆண்டில் இருந்து இரண்டாமிடத்திற்கு சென்றது. தொடர்ந்து உற்பத்தி குறைந்ததால் பொதுமக்களுக்கு போதியளவு பால் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

தட்டுப்பாடு

இதற்கிடையே களக்காட்டில் இருந்து தினசரி 2 ஆயிரம் லிட்டர் நெல்லை ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவதாக தெரிகிறது. மொத்தமுள்ள 5 ஆயிரம் லிட்டரில் 1,200 ஆயிரம் லிட்டர் நெல்லைக்கு அனுப்பி விட்டு எஞ்சிய 3,800 லிட்டர் பால் மட்டுமே களக்காடு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் களக்காடு பகுதியில் பண்ணை பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் பண்ணை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே களக்காடு பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பண்ணை பால் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News