உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-06-26 07:26 GMT   |   Update On 2022-06-26 07:26 GMT
  • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
  • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 18 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 978 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 19 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 100-க்கு 95 சதவீத மக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்து விட்டனர். பொது இடங்களிலும் சமூக இடைவெளி கேள்வி க்குறியாகி உள்ளது.

எனவே மீண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு, சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News