ஊட்டியில் கடைகளை சேதப்படுத்தி பொருட்களை சூறையாடிய யானைகள்
- கிளிஞ்சடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குட்டியுடன் சுற்றி வருகின்றன
- யானைகளை ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கொலக்கம்பை கிராமத்தில் தனியாா் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5 காட்டு யானைகள் புகுந்தன. அப்போது அவை அங்கு உள்ள ரேஷன் கடை, அங்கான்வாடி மையம், மளிகைக்கடை ஆகியவற்றை தாக்கி சேதப்படுத்தின.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி சென்று விட்டன.
கொலக்கம்பை, கிளிஞ்சடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குட்டியுடன் 5 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன.
எனவே அவற்றை ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், கெத்தை வனப்பகுதிக்குள் யானைகள் விரைவில் திருப்பி அனுபப்படும் எனவும் வனத்துறையினா் உறுதியளித்தனா்.