உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இன்று வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சற்று குறைந்தது- கிலோ ரூ.150-க்கு விற்பனை

Published On 2023-07-31 14:21 IST   |   Update On 2023-07-31 14:21:00 IST
  • மழையின்றி போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது.
  • இன்று வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் நெல்லை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி கொண்டு வரப்பட்டது.

நெல்லை:

வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை யால் அத்தியாவசியபொருட்களான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவைகளின் கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து காணப்படுகிறது.

தக்காளி வரத்து

மேலும் தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் குறைவாக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்னர்.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், அழகியபாண்டியபுரம் மானூர் உள்ளிட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கொத்தமல்லி இலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்து நெல்லை மார்க்கெட்டுகளுக்கு அதிகளவு விற்பனைக்கு வரும்.

விலை உயர்வு

ஆனால் மழையின்றி போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டதால் நெல்லை மார்க்கெட்டுகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ. 130-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ரூ. 160-க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் தேவையும் அதிகரித்து இருந்தது. இதனால் ஒரேநாளில் ரூ. 40 உயர்ந்து ரூ. 200-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் நெல்லை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி கொண்டு வரப்பட்டது. இதனால் கிலோவுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது.

ஆனால் மகாராஜநகர், டவுன் உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 130-க்கு விற்கப்பட்டது. மிளகாய் கிலோ ரூ. 80-க்கும், சின்ன வெங்காயம் தரத்திற்கேற்ப ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்கப்பட்டது. 

Tags:    

Similar News