ரூ.1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னைவாசி: ஆன்லைன் ஷாப்பிங்கில் வெளியான அதிர்ச்சி தகவல்
- நொய்டாவில் ஒருவர் புளூடூத் ஸபீக்கர்கள், ரோபோ வாக்வம் கிளீனர் போன்றவற்றை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சத்துக்கு வாங்கி உள்ளார்.
- பெங்களூருவாசிகள் நல்ல வாடிக்கையாளர்கள். தாராளமாக டிப்ஸ் கொடுக்கிறார்கள்.
சென்னை:
இந்தியர்கள் ஆன்லைனில் எப்படி பொருட்களை வாங்குகிறார்கள் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இந்தியர்களிடம் ஐபோன்கள் முதல் பால் வரை, தங்கம் முதல் காய்கறிகள் வரை, சிப்ஸ் முதல் கறிவேப்பிலை வரை அனைத்தையும் இணையதளம் வழியாக ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் ஆணுறை வாங்க ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். அவர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆகும்.
ஆணுறை விற்பனை ஆன்லைனில் படுஜோராக நடக்கிறது. ஒவ்வொரு 127 ஆர்டருக்கும் ஒருதடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி கூறி உள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்து இருந்ததாம். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 3 ஐபோன்களை ரூ.4.3 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இது இந்த ஆண்டில் ஒரு நேரத்தில் ஒருவரின் அதிகபட்ச தொகைக்கான ஆர்டர் என்று கூறி உள்ளது.
நொய்டாவில் ஒருவர் புளூடூத் ஸபீக்கர்கள், ரோபோ வாக்வம் கிளீனர் போன்றவற்றை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவர், சர்க்கரை இல்லாத ரெட்புல் பானம் வாங்க ரூ.16.3 லட்சம் செலவிட்டு உள்ளார். இதேபோல சென்னையை சேர்ந்த ஒருவர் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களுக்கு மட்டும் ரூ.2.41 லட்சம் செலவு செய்திருக்கிறார். பெங்களூருவாசிகள் நல்ல வாடிக்கையாளர்கள். தாராளமாக டிப்ஸ் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.