உள்ளூர் செய்திகள்

சாலை வசதி செய்து தர வலியுறுத்தி போராட்டம்

Published On 2022-12-24 15:32 IST   |   Update On 2022-12-24 15:32:00 IST
  • இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
  • 900 மீட்டருக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்த பகுதிகளுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக குண்டும், குழியுமாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அரைத்து செல்லவும், வேலைக்கு செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ, கார், போன்ற வாகனங்கள் இந்த பகுதிகளுக்குள் வர மறுக்கின்றன.

மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வண்டி வந்து, செல்ல முடியாத அவலநிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் என 60-க்கும் மேற்பட்டோர் குழந்தை குட்டிகளுடனும், பள்ளி சிறுவர்களுடனும் ஓசூர் தாலுக்கா அலுவலகத்திற்கு திரண்டு வந்து, அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெளியே சென்றிருந்த தாசில்தார் கவாஸ்கர் அலுவலகத்துக்கு திரும்பி வந்தார். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரை சூழ்ந்து தங்கள் பிரச்சினைகளை முறையிட்டனர். மேலும், தங்கள் பகுதிக்கு மெயின் ரோட்டிலிருந்து, பாவை கார்டன் வரை உள்ள 900 மீட்டருக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News