தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
நெல்லையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.
- கடந்த 3-ந் தேதி முதல் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்ற முயற்சிப்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை பஸ் நிலையம் எதிரே ஜோதிபுரம் திடலில் தென் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். இதில் பொருளாளர் மாரியப்பன், போராட்ட குழு தலைவர் பரமசிவன், போராட்ட குழுச் செயலாளர் சந்திரலால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பணி யாற்றும் 600-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் ஏ.ஐ.எப். திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிட வேண்டும். இதனால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனர். நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கையினை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும். சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
கடந்த 25.2.2001-க்கு பிறகு பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டத்தை நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.