சாலை விரிவாக்க பணியை சரியான முறையில் அளவீடு செய்யாத அதிகாரிகளை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
- கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய்செலவில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது
- நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.
கடலூர்:
கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனை தொடர்ந்து நேற்று 4 சர்வேயர்கள் சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு செய்ய தொடங்கினர். அப்போது சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஒரு சிலருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்டதாக கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அரசியல் கட்சியினர் மற்றும் நெல்லிக்குப்பம் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில ஒரு சில நபர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை சரியான முறையில் அளவீடு செய்யாமல் உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து வருகிற 8- ந் தேதி முதல் தொடர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டன. இதில் ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், அ.தி.மு.க. நகர செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், த.வா.க நகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், காங்கிரஸ் நகர தலைவர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணியில் பல்வேறு குளறுபடி செய்து சரியான முறையில் அளவீடு செய்து பணி மேற்கொள்ளாததால் நெல்லிக்குப்பத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.