உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜூலை 10-ந் தேதி 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-06-26 05:25 IST   |   Update On 2022-06-26 05:25:00 IST
  • பி.ஏ.4, பி.ஏ.5 தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
  • பொது இடங்களில் கூடுபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

நாவலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ அல்லது தீவிர சிகிச்சை தேவையோ என்ற அளவிலான பாதிப்புகள் இல்லை. என்றாலும் இப்போது பி.ஏ.4, பி.ஏ.5 என்ற தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அந்த குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் பாதிக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் கூடுபவர்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். முககவசங்கள் அணிந்து கொள்வதன் மூலமே தொற்றின் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்டு கொள்ள முடியும்.

முதல் தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்காகவும், தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார - மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிற வகையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதம் 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.

இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இது நம்மை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல, நமக்கு வந்தால் நமது குடும்பத்தாரையும், ஒட்டுமொத்தமாக அக்கம் பக்கத்தில் இருக்கிற அனைவரையுமே பாதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News