தமிழ்நாடு செய்திகள்

என்னை அடித்தால் திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது - அமைச்சர் கே.என்.நேரு

Published On 2025-12-15 12:39 IST   |   Update On 2025-12-15 12:39:00 IST
  • இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
  • நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

திருச்சி:

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News