தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி, குன்னூரில் உறைபனியால் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்- சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது

Published On 2025-12-15 11:45 IST   |   Update On 2025-12-15 11:45:00 IST
  • உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
  • வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகளவில் காணப்படும்.

இந்த ஆண்டு 40 நாட்கள் கழித்து தாமதமாக கடந்த 12-ந்தேதி உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களாகவே ஊட்டி, குன்னூரில் உறைபனி கொட்டி வருகிறது.

இன்றும் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் அதிகளவில் உறைபனி கொட்டியது.

இன்று தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 4.3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.

கொட்டும் உறைபனியால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, படகு இல்லம், பைக்காரா, குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அங்குள்ள செடி, கொடிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.

இதுதவிர சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் உறைபனி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலையில் உறைபனியை அகற்றி வண்டியை எடுப்பதற்குள் சிரமப்பட்டனர்.

குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் மீதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உறைபனி காணப்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக அதிகாலையில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் அதிகாலையில் வெளியில் வர முடியவில்லை.

இதனால் ஊட்டி, குன்னூரில் உள்ள முக்கிய பஜார் பகுதிகளில் காலை நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதை காண முடிந்தது. வெளியில் நடமாடிய ஒரு சிலரும் போர்வை, கம்பளி ஆடை, சுவர்ட்டர், சால்வை உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர்.

குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் தேயிலை செடிகள், மற்றும் மேரக்காய் பந்தல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் உறைபனி தாக்கம் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்களும் உறைபனி காரணமாக வெளியில் வரமுடியாமல் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர். உறைபனி குறைந்த பிறகே வெளியில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.

Tags:    

Similar News