மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் பரிசு வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- கடலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 350 மனுக்கள் வரப்பெற்றன.பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும்.
அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் அலுவல–ர்களுக்கு உத்தரவிட்டார். கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட , மாநில அளவிலான குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியப்போட்டி ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 6,000 ரூபாய், இரண்டாம் பரிசு ரூ.4,500 ம், மூன்றாம் பரிசு ரூ.3,500 வீதம்; மொத்தம் 15 மாணவர்களுக்கு அதற்கான காசோலையினையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.