கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
- கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், எட்டிமடை, க.க.சாவடி, அன்னூர், தெலுங்குபாளையம், கோவில்பாளையம் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது:-
கோவை மாவட்டத்தில் விவசாயிகளால் போதிய அளவு பயிர்களை சாகுபடி பண்ண முடியவில்லை. பல இடங்களில் நீர் வரத்து இல்லாததால் பயிர்கள் காய்ந்து போய் உள்ளன. எனவே கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நுழை வதை தடுக்கவும், மனித, விலங்கு மோதலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தமிழக அரசின் காப்பீட்டுத் தொகை, நிவாரணத் தொகை போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு கிசான் கார்டு அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண்மை துறை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பங்களை கொடுத்து கிசான் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
பாரத பிரமதரின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை மாதந்தோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கிசான் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக அதனை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட கலெக்டரின் விவசாய துறை நேரடி உதவியாளர் சபி அகமத், வேளாண்மை துறை இணை இயக்குனர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் பார்த்திபன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்