உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Published On 2023-06-11 14:51 IST   |   Update On 2023-06-11 14:51:00 IST
  • மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும்.
  • மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன.

அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ந் தேதியான நாளை (திங்கட்கிழமை) அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சராசரியாக டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கைக்கொடுத்ததாலும், கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.

நடப்பாண்டிலும், இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு, 80 கோடி ரூபாய் மதிப்பில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன. மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையில், 103.48 அடி நீர் மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி நாளை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை, மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.

இதன் மூலம், 4 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக, விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News