உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தர் ஜீவசமாதி பீடத்தின் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிய போது எடுத்த படம்.

சக்கரப்பட்டி சித்தர் ஜீவசமாதி பீடத்தின் கும்பாபிஷேக விழா

Published On 2023-04-05 07:29 GMT   |   Update On 2023-04-05 07:29 GMT
  • கோப்பணம்பாளையத்தில் உள்ள பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி சித்தர் பீடத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
  • இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி, மகாதீப ஆராதனை நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம்- கோப்பணம்பாளையத்தில் உள்ள பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி சித்தர் பீடத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி, மகாதீப ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாளிகை ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சியும், விநாயகர் வழிபாடும், முதற்கால யாக வேள்வி பூஜையும், நேற்று 4-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் திருமுறை பாராயணம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் அஷ்டலட்சுமி வழிபாடும், 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கலசம் வைத்தல், யந்தர ஸ்தாபனம், ரத்தனந்நியாசம், அஷ்ட பந்தனம் நடைபெற்றது. இன்று அதிகாலை திருமுறை பாராயணம், நாடி சந்தானம் 4-ம் கால யாக வேள்வி பூஜையும், அதை தொடர்ந்து மகா தீபாராதனையும், யாத்திரா தானம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்துக் குடங்களுடன் சிவாச்சாரியார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பாலகணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி ஆலய கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது. மகா அபிஷேகத்தை முன்னிட்டு பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால கணபதி, பாலமுருகன், சகாசிவம், சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் சுற்றுவட்டார அனைத்து சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News