உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 53 லட்சம் பேருக்கு மத்திய அரசின் காப்பீடு அட்டை- மத்திய மந்திரி தகவல்

Published On 2023-11-18 08:08 GMT   |   Update On 2023-11-18 08:08 GMT
  • குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் நேரடி ஆய்வு
  • கோவை பிரஸ் காலனி பகுதியில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்

 அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆரம்பத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசி மற்றும் கக்குவான், ரண ஜன்னி உள்ளிட்ட முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் இடமாக இருந்தது.

இந்நிலையில் இங்கு மத்திய அரசின் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்க 137 கோடி ரூபாயில் உலக தர கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பவார் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மருந்துகள் தயாரிக்கப்படும், இடங்களை பார்வையிட்டு ஆய்வக விவரங்களை கேட்டறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் 137 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஆய்வகமாக செயல்பட்டது. இந்த ஆய்வகம் பல உயிர்காக்கும் மருந்துகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தை பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு ஆய்வகம் கோவையில் பிரஸ் காலனி பகுதியில் அமைக்க 30 ஏக்கர் நிலத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதனால் மேலும் பல அரியவகை உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.

இப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குன்னூர் உப்பாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி பாரதி பர்வீன் பவார், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 27 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 27 ஆயிரம் மருத்துவமனைகளிலும் இதனை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

Tags:    

Similar News