உள்ளூர் செய்திகள்

மல்லூரில் தி.மு.க. பிரமுகர் மீது கந்து வட்டி வழக்கு - நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-06-14 09:12 GMT   |   Update On 2022-06-14 09:12 GMT
கந்து வட்டி வழக்கு தொடர்பாக சிக்கிய மல்லூர் தி.மு.க. பிரமுகர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு 700 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் :

சேலம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 31), பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் மல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பூபதியிடம் (42) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றார். அதற்காக வட்டி 30 ஆயிரம் சேர்த்து 80 ஆயிரம் திருப்பி கொடுத்தார்.

மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு சவுந்தர்ராஜன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை வாபஸ் பெறவும், ரூ.10 ஆயிரம் வட்டி கேட்டும் மீண்டும் பூபதி தொந்தரவு செய்து வந்தார்.

இது குறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் சவுந்தர்ராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் பூபதி மீது கந்து வட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரூரல் டி.எஸ்.பி. தையல் நாயகி மற்றும் போலீசார் பூபதிக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த பூர்த்தி செய்யப்படாத வெற்று பத்திரங்கள், உறுதிமொழி பத்திரங்கள், காசோலை உள்பட 700 ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News