உள்ளூர் செய்திகள்

கள்ளத்தொடர்பு பிரச்சினையில் சுங்கச்சாவடி காவலாளி கொலை?

Published On 2022-11-20 12:11 IST   |   Update On 2022-11-20 12:11:00 IST
  • கள்ளத்தொடர்பு பிரச்சினையில் சுங்கச்சாவடி காவலாளியை கொலை செய்து இருப்பார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டு சட்டை எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடலை ஆய்வு செய்தபோது கை, கால், தலை பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்ட ரத்த காயங்கள் இருந்தன.

அதனால் அந்த வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து தடயங்களை மறைக்க உடலை இங்கே கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றது தெரியவந்தது. கரும்பு சக்கை மற்றும் கருவேலம் முட்களை போட்டு எரித்ததால் உடல் முழுவதும் எரியாமல் சட்டையின் ஒரு பகுதி மட்டுமே எரிந்து இருந்தது.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அவை ஆனந்தவாடி சாலையில் 1 கி.மீ. தூரம் வரை ஓடி நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு (எ) சுரேஷ்குமார் (வயது 23) என்று தெரிந்தது. இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி சிதம்பரம் சாலையின் மணகதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கொளையாளிகள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்று அவரது வீடு மற்றும் சுங்க சாவடியிலும், அவரது செல்போனை வைத்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மணகதி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமண ஆன ஒரு பெண்ணிற்கும் வல்லரசுவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இந்த கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News