உள்ளூர் செய்திகள்

வெடிவிபத்தில் பலியான வசந்தா, சித்ரா, அம்பிகா, சத்தியராஜ் ஆகியோரை படத்தில் காணலாம். 

கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் பலி: சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published On 2022-06-24 09:29 GMT   |   Update On 2022-06-24 09:36 GMT
  • கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
  • விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.

மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது  ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News