உள்ளூர் செய்திகள்

ஆர்.எஸ்.பாரதியிடம் 500 கோடியே 1 ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ்

Published On 2023-04-30 07:42 IST   |   Update On 2023-04-30 07:42:00 IST
  • உங்கள் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
  • வீடியோ காட்சியை அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்க வேண்டும்.

சென்னை :

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை சார்பில் அவரது வக்கீல் ஆர்.சி.பால் கனகராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவராக இளம்வயதில் பொறுப்பு ஏற்றவர் அண்ணாமலை. கடந்த 14-ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் அளித்த பேட்டியில், 'ஆருத்ரா கோல்டு' மோசடியில் பல கோடி ரூபாயை அண்ணாமலை பெற்றுள்ளதாக முதலில் குற்றம் சாட்டினீர்கள்.

பின்னர், அண்ணாமலையும், அவரது கூட்டாளிகளும் ரூ.84 கோடியை பெற்றுள்ளனர் என்றும், எதற்காக பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தினார்கள் என்றும் கூறியுள்ளீர்கள். ஆனால், கூட்டாளி யார்? யார் மூலம் எவ்வளவு தொகை பெற்றார்? என்ற விவரங்களை கூறவில்லை

தி.மு.க.வினரின் ஊழல் குறித்த விவரங்களை என் கட்சிக்காரர் அண்ணாமலை வெளியிட்டதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான, சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தியுள்ளீர்கள்.

நீங்கள் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அண்ணாமலை மறுக்கிறார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்திடம் இருந்து பெருந்தொகை பெற்றுள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டை கூறுவதாகவும் நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

எனவே, நீங்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, சித்தரிக்கப்பட்டவை, அண்ணாமலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவை என்பது நிரூபணமாகிறது.

இதனால் உங்கள் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். எனவே, கடந்த 14-ந் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

அந்த வீடியோ காட்சியை அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மேற்கொண்டு பரப்பக்கூடாது.

இதை செய்யத் தவறினால், நீங்கள் என் கட்சிக்காரருக்கு 500 கோடியே 1 ரூபாயை மான நஷ்டஈடாக தரவேண்டும். அவ்வாறு தரும்பட்சத்தில், அந்த தொகையை பிரதமர் நலநிதிக்கு என் கட்சிக்காரர் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News