33-வது வார்டு அலுவலகத்தில் முதல்-அமைச்சர் புகைப்படத்தை அகற்றிய ஊழியர் மீது நடவடிக்கை- மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம், சாலை பணி போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- ரூ.60 லட்சம் மதிப்பில் 150 புதிய வாக்கி டாக்கிகள் வாங்க ஒப்புதல்
கோவை.
கோவை மாநகராட்சியில் இன்று மாமன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை பணி, சாலை பணி மேற்கொள்ளுதல் உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியரான மாணிக்கம் என்பவர், அலுவலகத்தில் இருந்த முதல்-அமைச்சரின் போட்டோவை அங்கிருந்து அண்மையில் அகற்றியதாக தெரிகிறது.
இந்த விவகாரம் இன்று நடந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களால் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய கவுன்சிலர்கள் முதல்-அமைச்சரின் போட்டோவை அகற்றிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசும்போது, இது தொடர்பாக மாநகராட்சி ஊழியரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் வந்தவுடன் அவர் மீது எந்த மாதிரி நடவடிக்கை வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். ஆனால் கவுன்சிலர்கள், முதல்-அமைச்சர் போட்டோவை அகற்றியவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள், முதல்-அமைச்சரின் போட்டோவை அகற்றிய மாநகராட்சி ஊழியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விரிவாக ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சியில் உள்ள மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள 300க்கும் மேற்பட்டோர் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வாக்கி டாக்கிகள் அவ்வப்போது பழுதாகி வருகிறது.
எனவே இதை மாற்றி தர கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த கூட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் 150 புதிய வாக்கி டாக்கிகள் வாங்கி கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம், சாலை பணி போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு 3 கூட்டத்தில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதால் இன்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவக்குமார், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.