தாய் யானையின் மீது படுத்து அதனை எழுப்ப முயன்ற குட்டி யானை.
வனத்துறையினரை நெருங்கவிடாமல் தாய் யானையின் மீது படுத்து குட்டி யானை பாசப்போராட்டம்
- தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
- யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.
வடவள்ளி:
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.
திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை. குட்டி யானை அதன் அருகே பரிதவித்தபடி இருந்தது.
இதனை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் குட்டி யானை, தாய் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் இருந்தது. யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.
மேலும் குட்டி யானை, தாய் யானையின் மேல் படுத்துக் கொண்டு தனது முழு பலத்தையும் காட்டி எழுப்ப முயன்றது. அம்மா எழுந்திரும்மா, எழுந்திரும்மா... என்பது போல் அந்த குட்டி யானையின் செயல்கள் இருந்தன. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண் போரை கண் கலங்கச் செய்தது.
வனத்துறையினர் பல மணி நேரம் போராடி பார்த்தனர். ஆனால் குட்டி யானை அங்கிருந்து நகராமல் தனது தாயை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தது. குட்டி யானை வழிவிட்டால் தான் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. இதுபற்றி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களது உத்தரவின்பேரில் முதுமலையில் இருந்து கும்கி யானை ஒரியன் வரவழைக்கப்பட்டது. கும்கி யானையுடன் கால்நடை மருத்துவர் விஜயன் என்பவரும் வந்தார். கும்கி யானை உள்ளே புகுந்து குட்டி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் குட்டி யானை அங்கிருந்து ஓடி வெகுதூரத்தில் போய் நின்றது.
இதையடுத்து தாய் யானையை கிரேன் உதவியுடன் நிறுத்தினர். யானைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்து, மாத்திரைகள் உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனை உட்கொண்ட யானை உடல் நலம் தேறி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
குட்டி யானை தொடர்ந்து தாய் யானையை கண்காணித்தபடியே சுற்றித்திரிகிறது. இந்த உருக்கமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.