உள்ளூர் செய்திகள்

மயக்கமடைந்த விவசாயி இளையராஜாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி

மனு கொடுத்து விட்டு வந்த போது கலெக்டர் அலுவலகம் அருகே மயங்கி விழுந்த விவசாயி

Published On 2023-01-09 15:20 IST   |   Update On 2023-01-09 15:20:00 IST
  • நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது
  • ராதாபுரம் துலுக்க ப்பட்டியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கொடுத்த மனுவில், ராதாபுரம் வட்டம், நம்பியாறு, மயிலாப்புதூர், அணைக்கட்டு, ஆணைகுளம் கால்வாய் மூலம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 130 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

மானூர் லட்சுமியாபுரத்தை சேர்ந்த விவசாயி இளையராஜா என்பவர் இன்று மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

எங்கள் பகுதியில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன். தற்போது நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் காட்டுப்பன்றிகள் புகுந்து அதை நாசம் செய்துள்ளனர்.

இதற்கு காப்பீட்டுத்தொகை கேட்ட போது மக்காசேளம் பயிருக்கு காப்பீடு கிடையாது என தெரிவித்தனர். எனவே வாழ்வாதாரம் கருதி நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயங்கி விழுந்தார்

பின்னர் அவர் மனு கொடுத்து விட்டு, வெளியே வந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர்.

அம்பை கோவில் குளத்தை சேர்ந்த சுப்பிரம ணியன் என்பவர் கையில் ஒரு மனுவுடன் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே எனது மனைவி கடந்த வாரம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக ஒரு மனு கொடுத்தார். அதில் நாங்கள் 30 வருடமாக குடியிருந்து வரும் வீட்டின் முன்பு உள்ள பொதுப்பாதையை சிலர் போலியான ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தடுக்க வேண்டும் என கூறியிருந்தோம். ஆனால் இந்த மனு பாளையில் உள்ள ஒரு டீக்கடையில் இருந்தது தெரியவந்தது.

இது எப்படி அங்கு சென்றது என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பாக அதிகாரி களிடம் கேட்ட போது மனுவை பெற்றுக்கொண்ட போது சீல் வைத்து கொடுப்பது வழக்கம். ஆனால் மனுதாரர் மனுவை கொடுக்காமல் சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.

தொடக்க பள்ளி

இந்து வியாபாரிகள் நலசங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

1,2,13,14,54 ஆகிய வார்டுகளை கொண்டு தச்சை மண்டலத்தில் 25 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் நலிவுற்றவர்கள். இங்கு ஒரே ஒரு அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அதில் 300 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இவர்கள் 6-ம் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்றால் டவுன் கல்லணைக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே எங்கள் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக உயர்த்த வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராதாபுரம் துலுக்க ப்பட்டியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கொடுத்த மனுவில், ராதாபுரம் வட்டம், நம்பியாறு, மயிலாப்புதூர், அணைக்கட்டு, ஆணைகுளம் கால்வாய் மூலம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 130 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News