மேலப்பாளையத்தில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன் தவறி விழுந்து பலி
- செரீப் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.
- குறுக்கே சென்ற நபர் மீது மோதாமல் இருக்க செரீப் பிரேக் பிடித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் செரீப் (வயது 25). இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு மனைவியும், அப்துல் காதர் (4) என்ற மகனும் உள்ளனர். நேற்று மாலை செரீப் தனது மகன் அப்துல்காதரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெட்ரோல் டேங்க் மீது உட்கார வைத்து சென்றுள்ளார்.
ஆமீன்புரம் 6-வது தெருவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டி ருந்தபோது சாலையின் குறுக்கே ஒரு நபர் சென்றுள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக செரீப் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது டேங்க் மீது அமர்ந்திருந்த அப்துல்காதர் கீழே தூக்கி வீசப்பட்டான். இதில் படுகாயமடைந்த அவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செரீப் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அப்துல்காதர் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.