2025 REWIND... பல்வேறு கோரிக்கை... பல்வேறு கட்ட போராட்டம்... தொடரும் தூய்மை பணியாளர்களின் சோகம்
- சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
வீடு சுத்தமாக இருந்தால் தெரு நன்றாக இருக்கும். தெரு சுத்தமாக இருந்தால் நகரம் நன்றாக இருக்கும். நகரம் நன்றாக இருந்தால் மாவட்டம் நன்றாக இருக்கும். மாவட்டம் நன்றாக இருந்தால் மாநிலம் நன்றாக இருக்கும். மாநிலம் நன்றாக இருந்தால் நாடே நன்றாக இருக்கும் என்பார்கள்... இதற்கு பொருள்...
வீடு சுத்தமாக இருப்பது என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் குறிக்கிறது, இது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. வீடுகளின் தூய்மை தெருக்களின் தூய்மையைத் தீர்மானிக்கிறது. இது குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பை உணர்த்துகிறது.
சுத்தமான தெருக்கள், சுத்தமான நகரங்களுக்கு வழிவகுக்கும். இது நகர்ப்புற மேம்பாடு, சுற்றுலா, மற்றும் பொது சுகாதாரத்திற்கு உதவுகிறது. மாவட்டங்கள் சீராக இருந்தால் மாநிலங்கள் வலுப்பெறும்; மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதாகும்.
இதற்கெல்லாம் முழு முதற்காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள். இவர்கள் குறித்து நாம் எப்போது பேசுகிறோம்... வெள்ளம் வந்தால் தெருக்களை சுத்தம் செய்ய இரவு, பகல் பாராமல் பணியாற்றும் போது. பிறகு போராட்டம் என்ற பெயரில் சாலைகளில் போட்டு செல்லும் குப்பைகளை சுத்தம் செய்யும் போது. பிறகு குப்பைகளில் தவறவிட்ட நகைகளை மீட்டு தரும் போது அவர்களை பாராட்டுகிறோம். அவ்வளவுதான்..
நம் வீட்டில் சேரும் மீதமான உணவு, குப்பைகளின் நாற்றத்தை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் குப்பை வண்டிகள் செல்லும் போது ஏற்படும் துர்நாற்றத்தை கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்படியிருக்க.. இதை எதை பற்றியும் கவலைப்படாமல் தெரு, சாலைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை தெய்வத்திற்கு நிகர் என்றால் மிகையல்ல...
இப்படியான தூய்மை பணியாளர்கள் 120 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து யாரும் கவலைப்படவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியவர்கள்
1 குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
2 பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
3 மாநகராட்சிகளில் நேரடியாகப் பணியாற்றுபவர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாட்டைக் களைய வேண்டும்.
4 தரமான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும்.
5 என்.எம்.ஆர் (NMR) முறையில் பணியாற்றியவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
என்பன முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடங்கிய போராட்டமானது உண்ணாவிரதம், காலவரையற்ற போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
இதனிடையே தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனையும் செய்தது. அதில், ஊதிய உயர்வு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு உள்ளிட்ட சில புதிய திட்டங்களை அறிவித்தது, ஆனால் போராட்டக்காரர்கள் இவை போதுமானதல்ல எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை, கோவை, மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் தீர்க்கப்படாத பிரச்சனையா தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.