உள்ளூர் செய்திகள்

7 வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2022-07-23 09:56 GMT   |   Update On 2022-07-23 09:56 GMT
  • வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
  • வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

ஊட்டி:

கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் 2 காட்டு யானைகள் புகுந்தது.

தொடர்ந்து இளையராஜா என்பவரது கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி ஆகியோரது வீடுகளை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தின. ஒரே நாள் இரவில் காட்டு யானைகள் 6 வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதை கண்டித்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.

தகவல் அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டு வந்தது. மேலும் இவரது வீடு தனியாக உள்ளதால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக அவர் இரவில் உறவினர்கள் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி வந்தார்.நேற்று காலை தனது வீட்டுக்கு வந்தபோது காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தாக்குதலால் நிம்மதியை இழந்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியுடன் கூறினர். ஒரே நாளில் 7 வீடுகளை காட்டு யானைகள் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News