உள்ளூர் செய்திகள்

நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் கைது- உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

Published On 2023-09-20 14:53 IST   |   Update On 2023-09-20 14:53:00 IST
  • கடந்த ஜனவரி மாதம் நவநீதன் கிருஷ்ணன் கோவிலில் வைத்து ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
  • பேச்சிமுத்து உள்பட 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை அருகே மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65). ஆட்டோ டிரைவர்.

வெட்டிக்கொலை

இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

4 பேர் கைது

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் நவநீதன் கிருஷ்ணன் கோவிலில் வைத்து ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக அந்த கொலையில் தொடர்புடைய ஒருவரின் உறவினரான விஜயகுமாரை, அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக 12 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில் மேலச்செவலை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்ற கண்ணன் (வயது 25), முப்பிடாதி (20), மேலச்செவல் ரஸ்தா தெருவை சேர்ந்த மாயாண்டி (21), நடுக்கல்லூரை சேர்ந்த பேச்சிமுத்து (20) ஆகிய 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதற்கிடையே 4 நாட்களாக விஜயகுமார் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து மேலச்செவல் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், தாசில்தார் விஜயா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் விஜயகுமாரின் மனைவி அல்லது மகனுக்கு வேலைக்கு பரிந்துரை செய்வது, விதவைகளுக்கான சலுகைகள், நிவாரண உதவி கிடைக்க உதவி செய்வது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று உடலை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News