கோவையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது
- 4 பேரிடமிருந்து 13 பவுன் தங்கச்சங்கிலி, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் செயின் பறிப்பு உள்ளிட்டவை நடந்து வந்தது.
இதனால் மக்கள் வெளியில் தனியாக வரவே அச்சப்பட்டனர். தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாத்துரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு அதில் உள்ள காட்சிகளை கைப்பற்றி பார்த்தனர்.
அப்போது அதில் 4 பேர் கும்பல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அவர்களை பல்வேறு கோணங்களில் விசாரித்து தேடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை எடுத்து அதன் மூலம் தேடினர்.
அப்போது அந்த போட்டோக்களில் இருந்த 4 பேரின் உருவம், சி.சி.டி.வி.காமிராவில் பார்த்த உருவத்துடன் ஒத்துப்போனது. இதனை வைத்து விசாரித்த போது, அவர்கள் பவானிசாகர், பழையம்பள்ளியை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது20), ஈரோடு நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி விஜயராஜன்(19), பவானிசாகர், குரும்பபாளையம் பச்சை என்ற ஸ்ரீகாந்த்(20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எங்கிருக்கின்றனர் என தேடிய போது, அந்த கும்பல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில், இவர்கள் மீது ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
4 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், வெளியில் வந்த உடனேயே தங்களது கைவரிசையை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் தங்கள் மீது ஈரோட்டில் வழக்குகள் இருப்பதால் கோவைக்கு சென்று வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 4 பேரும் கோவை வந்து வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 13 பவுன் தங்கச்சங்கிலி, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.