உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்த சுற்றுலா பயணிகள்- ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2023-05-21 04:51 GMT   |   Update On 2023-05-21 04:51 GMT
  • யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
  • கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News