உள்ளூர் செய்திகள்
கருணாநிதி

சென்னையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது

Published On 2022-05-25 07:24 GMT   |   Update On 2022-05-25 07:24 GMT
கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது.

கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிலை திறப்புக்கான நிகழ்ச்சி அன்று மாலை 5.45 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News