திருவள்ளூரில் மீன் மார்க்கெட் அமைக்க இடம் தேர்வு
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகரில் மீன் மார்க்கெட்டிற்கு என்று தனி இடம் கிடையாது. இதனால் தனியார் வாடகை கடைகளில் சாலை ஓரங்களிலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வந்து அங்கேயே வெட்டி சுத்தம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அவ்வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
எனவே பல்வேறு இடங்களில் இயங்கி வரும் மீன் கடைகளை ஒன்றிணைத்து தனியாக மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் நகரில் மீன் மார்க்கெட் அமைக்கும் இடங்களை திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மெர்சி அமலா மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு வருகிறார்கள். அவர்கள் உழவர் சந்தை, பூ மாலை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடத்தினை மீன் மார்க்கெட் அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.