உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

நீலகிரி சுற்றுலா தலங்கள் சுற்றுலா தொழிலும் பாதிக்கும் அபாயம்

Published On 2022-01-22 05:34 GMT   |   Update On 2022-01-22 05:34 GMT
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழகத்தின் பிற பகுதிகள், கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

தற்போது அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுற்றுலா தலங்களை காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கி விட்டது.

இதனால் பூங்காக்கள், படகு இல்லங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அவ்வாறு வர கூடிய ஒரு சில சுற்றுலா பயணிகளும் நகரில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் சுற்றுலா தலங்களுக்கு அருகில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் ஊட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தொற்று பாதிப்பு அதிகரித்து வர கூடிய நிலையில் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாக கூடிய சூழல் உருவாகி உள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும், 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த, 2020-ல் 6 லட்சம், 2021-ல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டும் வருகை தந்துள்ளனர்.

இதன் மூலம், 6 கோடி ரூபாய் மட்டும் நுழைவு கட்டணம் வசூல் ஆகியுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணை மூலம் அதிக வருவாய், ஊட்டி தாவரவியல் பூங்கா மூலம்தான் வசூலாகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததால், 16 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags:    

Similar News