உள்ளூர் செய்திகள்
பழங்குடியின மக்களுடன் கலெக்டர் அம்ரித் கலந்துரையாடினார்.

பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய நீலகிரி கலெக்டர்

Published On 2022-01-19 09:01 GMT   |   Update On 2022-01-19 09:01 GMT
தேனாடு ஊராட்சியில் நடைபெறும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
ஊட்டி:

 நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு ஊராட்சியில் ரூ.90  லட்சம் மதிப்பில் கடச்சோலை முதல் செடிகல் வரை மேம்படுத்தப்படும் சாலை பணிகளை  கலெக்டர்  அம்ரித்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். 

 தமிழக அரசால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட  கலெக்டர் கேட்டறிந்து, குடிநீர், மின்சாரம், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா?  என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.        

பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:

தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட செடிகல் கிராமத்தில்   வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் நேரடியாக, நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகை தந்துள்ளோம். உங்களது குறைகளை முழுமையாக தெரிவிக்க வேண்டும். எந்த குறைகள் உடனடியாக தீர்த்து வைக்க முடியுமோ அந்த குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். சில குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து நிவர்த்தி செய்யப்படும். 

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் மூலம் 2020-2021-ம் ஆண்டில் ரூ.90  லட்சம் மதிப்பில் 1.250 கி.மீ சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  

கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணத்தினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளை பழங்குடியினர் முழுமையாக பெற்று தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்தி கொள்ளவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.   
Tags:    

Similar News