உள்ளூர் செய்திகள்
தேயிலை பூங்காவில் புதிதாக மலர் அருவி மற்றும் நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு உள்ள காட்சி

சுற்றுலா பயணிகளை கவர ஊட்டி தேயிலை பூங்காவில் மலர் அருவி, செயற்கை நீர்வீழ்ச்சி

Published On 2022-01-18 04:47 GMT   |   Update On 2022-01-18 04:47 GMT
தோட்டக்கலைத்துறை மூலம் சுற்றுலா பயணிகளை கவரவும், பூங்காவை மேம்படுத்தவும் புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா அருகே தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு 6 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன் நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அவர்களின் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளது.

மேலும் நடைபாதையில் நடந்து சென்றபடி மலர் அலங்கார செடிகளை கண்டு ரசிக்கவும், காட்சி மாடத்தில் நின்று பூங்காவின் இயற்கை அழகை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழவும் வசதி உள்ளது.

சமீபத்தில் அங்கு சுற்றுலா பயணிகளை கவர இந்திய வரைபடம் தமிழ்நாடு குறியூடு போன்ற அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டன. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாகவும், நேர கட்டுப்பாடுகள் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை மூலம் சுற்றுலா பயணிகளை கவரவும், பூங்காவை மேம்படுத்தவும் புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தேயிலை பூங்காவில் இயற்கையாக அமைந்த பாறையையொட்டி ஊற்று தண்ணீ எப்போதும் சென்று கொண்டே இருக்கிறது.

இந்த தண்ணீரை திசை திருப்பி பாறையில் இருந்து விழுவது போல் செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு வர்ணம் தீட்டப்பட்டு வாத்து நிற்பது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் அருகே மலர்கள் கொட்டுவது போல் அலங்கார செடிகளுடன் அருவி போன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக மலைச்சரிவில் 12 பாத்திகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் கற்கள் வைக்கப்பட்டன. அதன் நடுவே தயார்படுத்தப்பட்ட மண்ணில் ஐரிஸ், கோல்டன் டொரண்டா கஜேனியா உள்பட 5 ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

புதிய அலங்காரம் முன்பு நடைபாதை ஏற்படுத்தி, இருக்கை வசதி போடப்பட்டுள்ளது. அதன் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து செல்கின்றனர்.

இந்த செடிகள் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால் நன்றாக வளர்ந்தால் மேலும் அழகாக இருக்கும். இதற்கு தண்ணீர் பாய்த்து, உரமிட்டு பராமரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News