உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் காற்று மாசு ஏற்படும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டாம்- கலெக்டர் அம்ரித் வலியுறுத்தல்
செயற்கையான பொருட்களை எரிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் நாளை போகி பண்டிகையை புகை மாசின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
தமிழகத்தில் பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை தொடங்க வேண்டும் என்ற நோக்கில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலுமென’ என நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப்பண்டிகை, காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
இத்தகைய பழக்கம் பெரும் நகர்புறங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள பழைய பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டையர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதாக மாறி புகை மாசு ஏற்படுகிறது .
இப்புகையால் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக் கும் தீங்கு விளைவிப்பதாகும். கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சித்திணறல் மற்றும் இதர உடல் நலக்குறைவுகள் ஏற்பட ஏதுவாகும். அடர்த்தியான புகை மூட்டம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படவும், விபத்து ஏற்படவும் வாய்ப்பாக அமையும்.
ஆகவே இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. செயற்கையான பொருட்களை எரிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும். புகை மாசற்ற போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.