உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊட்டியில் உழவர் சந்தை இடமாற்றம்

Published On 2022-01-10 10:07 IST   |   Update On 2022-01-10 10:07:00 IST
ஊட்டியை அடுத்த சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, தற்காலிகமாக நாளை முதல் ஊட்டி என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும்.

ஊட்டி:

3-வது அலையால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் ஊட்டியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. நாளை (11-ந் தேதி) முதல் உழவர் சந்தை அங்குள்ள என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டியை அடுத்த சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, தற்காலிகமாக நாளை முதல் ஊட்டி என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் ஷோபியா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை ஆய்வு செய்த கலெக்டர், கூட்ட நெரிசலை தடுக்க மார்க்கெட்டில் உள்ள கடைகளை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றலாமா, சுழற்சி முறையில் கடைகளை இயக்கலாமா? என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.

Similar News