உள்ளூர் செய்திகள்
கொய் மலர்கள்

கொரோனா தொற்று கட்டுப்பாடு- நீலகிரியில் கொய் மலர்கள் வர்த்தகம் பாதிப்பு

Published On 2022-01-09 11:21 IST   |   Update On 2022-01-09 11:21:00 IST
அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தில் விழாக்கள், சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல் அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் லில்லியம், கார்னே‌ஷன், ஜொர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறை முகமாகவும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யப்படும் கொய்மலர்கள் பெங்களூரு, கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலர் சாகுபடி முடங்கிவிட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமை குடில்கள் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய்மலர்கள் அழுகி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தில் விழாக்கள், சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல் அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 50 ஏக்கரில் 300 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரியில் இருந்து மலர்களை கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.

நாள் ஒன்றுக்கு 50 பெட்டிகள் மலர்கள் அனுப்பப்படும் . ஒரு பெட்டி ரூ. 14 முதல் ரூ. 15 ஆயிரம் மதிப்புடையது. இந்த ஒட்டுமொத்த வர்த்தகம் தற்போது தடைபட்டுவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News