உள்ளூர் செய்திகள்
தீ விபத்து

வால்பாறையில் நள்ளிரவில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

Published On 2022-01-08 08:31 GMT   |   Update On 2022-01-08 08:31 GMT
வால்பாறையில் நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தில் 8 வீடுகளிலும் இருந்த மின் சாதன பொருட்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
வால்பாறை:

வால்பாறை அருகில் உள்ள தனியார் காபி நிறுவனத்திற்கு சொந்தமான பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் காபி தோட்டம் உள்ளது.

இந்த தேயிலை மற்றும் காபித் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 8 குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று காலை அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதியில் வசிக்ககூடிய தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து கூரை வழியாக கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி கரும்புகை அதிகமாக வந்த வண்ணம் இருந்தது.

இதனால் அதிர்ச்சியான ராஜேந்திரன் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியில் ஓடிவந்து சத்தம் போட்டனர்.

அவர்களது சத்தத்தை கேட்டதும் அருகே வசிக்க கூடிய மக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி அருகே உள்ள 7 வீடுகளுக்கும் பரவியது. அந்த வீடுகளிலும் தீ பற்றி எரிந்தது.

இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயை அணைக்க முயன்றும் முடியாததால் சம்பவம் குறித்து எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 3 வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி எரிந்தது.

இதனால் தீயணைப்பு வீரர்களும் எஸ்டேட் தொழிலாளர்களும் தீயை அணைக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினரும் எஸ்டேட் தொழிலாளர்களும் நள்ளிரவு 2 மணியளவில் தீயை அணைத்தனர்.

நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தில் 8 வீடுகளிலும் இருந்த மின் சாதன பொருட்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. வால்பாறை போலீசாரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனர். தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை தீ விபத்து நடந்த பகுதியில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு மக்களிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News