உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஊட்டியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய தனியார் பஸ் டிராவல்ஸ் உரிமையாளருக்கு அபராதம்

Published On 2022-01-07 13:38 IST   |   Update On 2022-01-07 13:38:00 IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய தனியார் பஸ் டிராவல்ஸ் உரிமையாளருக்கு நகராட்சி சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஊட்டி:

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நீலகிரியில், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் தட்டு, வனவிலங்குகள் நலன் கருதி, பாலியஸ்டர் மற்றும் நைலான் பைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதன்படி 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

விதிகளை மீறி விற்போரை, அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கண்காணித்து, அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது, குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த தடை உள்ளது

இருப்பினும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக வரும் புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் ஒன்றில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில்  நகராட்சி சூகாதார அலுவலர் மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், அந்த தனியார் பஸ் டிராவல்ஸ் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதற்கிடையே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்றும், நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில், மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாநில எல்லைகளிலும் மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Similar News