உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் ஓட்டல்களில் காலாவதி பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான உணவகங்கள், ஓட்டல்கள் உள்ளன. தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் சில உணவகங்கள், ஓட்டல்களில் தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் வழங்குவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து ஊட்டி நகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் சுகாதார அலுவலர் டாக்டர் ஸ்ரீதரன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் ரத்னகுமார், சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தராஜன், நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.
டீக்கடை, ஓட்டல், பேக்கரி, மளிகை கடை, டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடந்தது. ஊட்டி கிளப் சாலையில் சுகாதாரமற்ற நிலையில் உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த உணவகத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தரமற்ற நிலையில் இருந்த உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
இது குறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீதரன் கூறுகையில், காலாவதியான பொருட்கள், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. சுகாதாரமான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். சில கடைகளில் தொடர்ந்து சுகாதாரமில்லாத உணவு வகை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வணிகர்கள் சுகாதாரமான உணவு பொருட்கள், தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.கடைகள் மற்றும் ஓட்டல்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.