உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு
மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
பிளாஸ்டிக் பையின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ குறைந்தபட்சம் 100 முதல் 400 ஆண்டுகள். அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக் காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுவதற்கும், வெள்ளக்காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் முக்கிய காரணியாக உள்ளது.
ஆட்கொல்லி நோய்களை பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பயன் இல்லை. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த பிளாஸ்டிக் பயன்பாடு சமீபகாலமாக படிபடியாக அதிகரித்து வருகிறது. சாலையோர வனப்பகுதியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
சுற்றுலா தலங்கள் கொரோனா தொற்று காரணமாக, வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை இன்றி, சாலையோர வனங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்தன. தற்போது அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு உள்ளதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள், வெகுவாக வருகை அதிகரித்தது.
இவர்கள் எடுத்து வரும் உணவை, சாலையோரங்களில் அமர்ந்து உண்டுவிட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோர வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் வனச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, மாநில நுழைவுவாயில் பகுதியில் உள்ள நீலகிரியில் பிளாஸ்டிக் தடை குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதன் மூலமே இதனை தடுக்க முடியும். நீலகிரியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு வேதனை அளிக்கிறது என்றனர்.